ஒரு நாள் நள்ளிரவு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. யாரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது என்று எடுத்துப் பார்த்தேன் அது புதிய இலக்கமாக இருந்தது. அநேகமாக அறிமுகம் அற்றவர்களின் அழைப்புகளை, அதுவும் Private Number என்று வரும் அழைப்புகளிற்கு நான் பதிலளிக்க விரும்புவதில்லை.
ஆனால் அழைப்பு விடுத்தவரின் தொலைப்பேசி இலக்கம் தென்படவே பதிலளித்தேன். எதிர்முனையில் “கெலோ வணக்கம்” என்றதும் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் அது ஒரு தமிழ் குரல். ஆனால் அது இதுவரை எனக்கு பரிச்சியமில்லாத ஒரு புதிய குரல்.
நாடு விட்டு வந்திருக்கும் எமக்கு இங்கே எமது தமிழ் உறவுகளின் உறவுகளே மனதுக்கு புத்துணர்ச்சி தரும் விடயங்களாக இருக்கிறது.
பதினாறு மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற மகாகவி பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப் போல் இனிமையான ஒரு மொழியைக் யாம் காணோம்” என்றது நினைவிற்கு வந்தது. உண்மைதான், அதுவும் வேறு ஒரு நாட்டில் வசிக்கும் எமக்கு தமிழ் வார்த்தைகளை கேட்கும் போது மனதிற்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இனிமையாகத்தான் இருந்தது.
அந்த இனிமை, தொலைப்பேசி அழைப்பைத் துண்டிக்கும் முன்பே கசந்தும் விட்டது.
விசயம் இதுதான், எதிர்முனையில் பேசிய நபர், ஒரு அன்பர் எனது தொலைப்பேசி இலக்கத்தை கொடுத்ததாகவும், தமிழர் எனும் காரணத்தால் பேசுவதாகவும் தொடர்ந்தார். எப்படியோ தன்னை ஓர் மிகுந்த தமிழ் பற்றாளர் போல் இணங்காட்ட முயன்றார். தமிழ் பற்றியும், கொங்கொங் வாழ் தமிழர்களின் ஒற்றுமைப் பற்றியும் பேசினார். பேச்சு சூடு பிடித்தது.
அந்த நபர் கொங்கொங்கில் கிட்டத்தட்ட ஐந்து ஆறு வருடங்களாக இருப்பவர் என்பதால், கொங்கொங்கில் வசிக்கும் அநேகமான தமிழர்களுக்கு பரிச்சயமானவர். பல வருட கொங்கொங் வாழ்க்கையின் தனது அரும் பெறும் சாதனைகளாக நிறைய கூறினார். மனுசன் பாவம் பேசிக்கொண்டிருக்கும் போதே வடகிழக்கு பிராந்திய கட்டளை தளபதி ஆகிவிடுவார். என்னடாப்பா இந்த மனுசனுக்கு நானா கிடைத்தேன். சரி நபர் போதையில் இருப்பதானால் இவ்வாறு கூறுகிறார் என்று நினைத்துக்கொண்டேன். வயது நாற்பதுக்கும் ஐம்பதுக்கும் இடைபட்டவர் என்பதால் வயதுக்கும் மரியாதை கொடுத்து மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தேன்.
அவர் குரலில் தள்ளாட்டம் தெரிந்தது. அவரது பேச்சு போதையில் பேசுகிறார் என்பதை உணர்த்தியது. திடீரென ஆக்ரோசமாக பேசினார். நபர் போதையில் சண்டியர் ஆகிவிட்டார் போல் தெரிந்தது. தமிழர்களில் கெறி தமிழனும் இருக்கிறான்கள் என்றார்.
“கெறி தெமழன்” என்றால் யார் தெரியுமா? என்று கேட்டார்.
“கெறி தமிழன்” எனக்கு விசயம் விளங்கவில்லை. பேச்சு தடம் மாறியது. இருப்பினும் நபர் போதையில் இருப்பதால் இவ்வாறு பேசுகிறார் என நினைத்துக்கொண்டு ஒருவாறு தொலைப்பேசி இணைப்பை துண்டித்தேன்.
தமிழர்களை சிங்களவர்கள் “தெமழா” என்று அழைப்பதை கண்டுள்ளேன். தமிழர்களை இழிவாக பேசுவதற்கு உபயோகிக்கும் ஒரு வசைமொழியே இந்த “கெறி தெமழன்” என்ற சொல்லாகும். இந்த வார்த்தையை பலமுறை இராணுவ சோதனை சாவடிகளில் கேட்டுள்ளேன். இவ்வாரான ஒரு தரக்குறைவான வார்த்தையை தமிழரான இவரே ஏன் உபயோகிக்கிறார் என்று குழப்பமாகவும் இருந்தது.
இவ்வாறான மரியாதை அற்ற மனிதர்களின் உறவுகளை தவிர்த்துக்கொள்வது நன்று என நினைத்துக்கொண்டேன். அதன் பிறகு அந்நபரின் தொலைப்பேசி அழைப்பு பலமுறை வந்தது. ஆனால் நான் பேச விரும்பாது துண்டித்து விடுவேன்.
காலச்சக்கரம் சுழன்றது. கொங்கொங்கில் வசிப்பதோ கொஞ்சத் தமிழர்கள். மீண்டும் அவருடன் பேச வேண்டி ஏற்பட்டது. நல்லுறவும் ஏற்பட்டது. இப்பொழுது முன்பு போல் அல்லாமல் நல்ல மாதிரியாக பேசுவார்.
ஒரு நாள் அவரது வீட்டிற்கு ஒரு நிகழ்வுக்காக கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதால் போயிருந்தேன். அவரது குழந்தைகள் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். நான் அக் குழந்தைகளுடன் தமிழில் பேசினேன். அக் குழந்தைகள் பதிலளிக்கவில்லை. மீண்டும் மீண்டும் பேசினேன். ம்ம்… பதில் இல்லை.
நபர் பதிலளித்தார், பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்றார். ஆச்சரியமாக இருந்தது. அன்று தமிழ் பற்றாளர் போல் பேசினார் இன்று தன் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்கிறாரே.
மனதில் எழுந்த கேள்விகள், பிள்ளைகள் ஆங்கிலத்தில் கல்வி கற்றாலும், வீட்டில் தாய் தந்தையருடன் தமது தாய் மொழி தமிழில் தானே பேசியிருக்க வேண்டும். சரி பிள்ளைகள் சிறியவர்கள் பெரியவர்களான பெற்றோர் தம் பிள்ளைகளுடன் வீட்டில் என்ன மொழி பேசினார்கள்?
சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே எதிரே அவரது மகன் வந்தான். அவனது கையைப் பற்றி பெயர் என்ன என்றேன். “தமிழ் தெரியாது” என்று ஆங்கிலத்தில் பதிலளித்தான்.
சரி பிள்ளைகள் ஆங்கிலத்தில் கல்வி கற்பதாலும், தமிழ் மொழி உரையாடல்கள் இன்றி வளர்ந்து விட்டதாலும் இவர்களுக்கு தமிழ் புரியவில்லை என்று நினைத்துக்கொண்டேன். அதனால் நானும் ஆங்கிலத்திலேயே பேச முற்பட்டேன்.
What is your native language?
சிறுவன் பதிலளித்தான். “I am Sinhala”.
திகைப்புடன் திரும்பிப் பார்த்தேன். உடனே அந்த நபர் கூறினார் இவனின் தாய் சிங்களம். அருகே அவனது தாயார் நின்றுக்கொண்டிருந்தார்.
அதிர்ச்சியாக இருந்தது. சரி காதல் திருமணமாக இருக்கலாம். இருப்பினும் தகப்பன் தமிழ் எனும் போது, பிள்ளை தமிழன் என்று கூறாமல் சிங்களம் என்று கூறுகிறானே! வீட்டிலும் இலங்கையின் அரசியலா…?
என்னத்தான் ஒருவன் எப்படி வாழ்ந்தாலும் தமது தாய் மொழி மறந்து வாழ்வது வாழ்வா? அந்நிய தேசங்களில் ஆயிரமாயிரம் மொழிகளில் வல்லுநர்களானாலும், உலக தத்துவ ஞானியானாலும் தாய் மொழியான தமிழை மறந்து வாழ்வது வாழ்வா? அந்நிய தேசங்களில் தமிழை கற்றுக் கொடுக்க வாய்ப்பு இல்லாதிருந்தாலும் தன் குழந்தைகளுடன் தமிழில் பேசாதவன் தமிழனா? பேர் சொல்லும் பிள்ளை என்பார்கள். தன் பிள்ளையே தமிழன் இல்லை என்கிறது. தன் பிள்ளைக்கு நீ ஒரு தமிழனின் பிள்ளை “நீ ஒரு தமிழன்” என்றேனும் கூறி வளர்க்காதவனும் ஒரு தமிழனா..??
இல்லை! இல்லை!! இவர் ஒரு தமிழனே இல்லை!
குழப்பமாக இருந்தது.
ஆனால் குழப்பம் இல்லாமல் இந்நபர் ஒரு நாள் கேட்ட கேள்விக்கான பதில் இப்போது தெளிவாக விளங்கியது.
அது “கெறி தெமழன் என்றால் யார் என்று தெரியுமா?”
தெளிவுடன் வெளியேறினேன். காதில் தேனிசை தென்றல் செல்லப்பாவின் பாடல் வரிகள் ஒலித்துக்கொண்டிருந்தன.
தமிழா நீ பேசுவது தமிழா..
சாட்டையடிப் பதிவு நண்பரே.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே.
வணக்கம் நண்பனே உங்களுடைய தமிழ் ஆர்வத்தை மதிகிரன்
கேட்கவே சற்று அதிர்ச்சியாகவும் சற்று ஆச்சர்யமாகவும் இருக்கிறது தோழரே…….