ஹொங்கொங் நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ள எமக்கு; இங்கே சில தமிழக உறவுகளது உறவுகள் உண்டு. கிட்டத்தட்ட 2000 த்திற்கும் அதிகமான தமிழக தமிழர்கள் இந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக தமிழீழத்திலிருந்தோ, சிறிலங்காவிலிருந்தோ அல்லது வேறு ஒரு நாட்டிலிருந்தோ ஹொங்கொங் வரும் தமிழர்கள் குறிப்பாக “சிம் சா சுயி” (Tsim Sha Tsui) எனும் பகுதியில் அமைந்துள்ள “சுங் கிங் மென்சன்” எனும் கட்டிடத்திற்கே வருவார்கள். காரணம் ஹொங்கொங்கில் இங்கு மட்டுமே தமிழர்களுக்கு ஏற்ற உணவு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. மற்றும் தமிழர்கள் அதிகம் நடமாடும் கட்டிடமும் இந்த “சுங் கிங் மென்சன்” கட்டிடம் தான்.
சிறிலங்கா தமிழர்கள் இங்கே பல்வேறுப் பகுதிகளில் வசித்தாலும் அதிகளவில் வசிப்பது “யுங் லோங்” (Yuen Long) என்று அழைக்கப்படும் பகுதியில் ஆகும். இது சிம் சா சுயி என்ற இடத்திலிருந்து கிட்டத்தட்ட 30 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ளது.
இருப்பினும் எல்லோருக்கும் பரிச்சையமான இடமும், அதிகமான தமிழர்கள் நடமாடும் இடமும் இந்த “சுங் கிங் மென்சன்” கட்டிடம் தான்.
சரி விடயத்திற்கு வருவோம்.
இங்கே சில தமிழக உறவுகளுடன் கலந்துரையாடும் போது தமிழீழத் தமிழர்களாகிய நாங்கள் ஹொங்கொங் நாட்டின் பெயரை “கொங்கொங்” என்று உச்சரிப்பது தொடர்பாக சிறு விவாதம் எழுந்தது.அதற்கான விடை தரும் பொருட்டே இந்த ஆக்கத்தை எழுதுகிறேன்.
நாங்கள் “கொங்கொங்” என்று உச்சரித்தாலும், ஆங்கிலத்தில் Hong Kong என்று தான் எழுதப்பட்டுள்ளது. இதை இந்த நாட்டவரும், இந்த நாட்டில் வசிக்கும் பிரித்தானியர் மற்றும் ஐரோப்பியர் அமெரிக்கர் போன்றோரும் ஹொங்கொங் என்று தான் உச்சரிக்கின்றனர்.
இந்தியா, பாக்கிஸ்த்தான், நேபாள் நாட்டவர்கள் “ஹாங்காங்” என்று உச்சரிக்கின்றனர்.
ஆனால், தமிழீழத் தமிழர்களோ, தமிழ் உச்சரிப்புக்களிற்கு உட்படாத சொற்களை, அதாவது (வட இந்திய) ஜ, ஸ, ஹ, ஷ, போன்ற கிரந்த எழுத்துக்களின் ஒலிக்குறிகளை பயன்படுத்துவது மிகக் குறைவு. குறிப்பாக எமது நடைமுறை வாழ்க்கையில் கூட பிற மொழிகளின் கலப்பை விரும்புவதில்லை.
எழுத்தாக்கங்கள் போன்றவற்றிலும் தமிழ் ஒலிக் குறிகளுக்கு உற்படாத சொற்களை, வாக்கிய அமைப்புக்களை முடிந்தவரையில் தவிர்த்தே வருகின்றனர்.
இதற்கு காரணம் எம்மவர்களிடம் காணப்படும் அதிக அளவிலான தமிழ் பற்றே ஆகும்.
அந்நிய ஆதிக்க காலங்களின் போது தமிழர்கள் வாழ்ந்த எல்லாப் பிரதேசங்களையும் போன்று சில அந்நிய மொழிகளின் திணிபுகள் தமிழீழத்தில் தமிழுக்கும் ஏற்பட்டது. ஆயினும் அது மற்றைய தமிழர் வாழ் பிரதேசங்களைப் போன்று, பிற மொழிகளின் ஆதிக்கம் தமிழீழத்தில் தமிழை சீர்குலைக்கும் அளவிற்கு செல்லவில்லை. அல்லது எமது மூதாளர்கள் அவ்வாறு மொழிச் சீரழிவுக்கு செல்ல இடங்கொடாது காத்தனர் என்பதே பொருத்தமான கூற்றாகும். அக்காலம் தொட்டு இன்றுவரைப் பார்த்தால் தமிழ் பற்று இப்பிரதேசங்களில் மெம்மேலும் வழுவுற்றிருப்பதையே காணக்கூடியதாக இருக்கின்றது. தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் தோன்றியிருக்கும் இனமுரண்பாடும் ஒரு காரணமாகப் பார்க்கலாம். 1980 களின் பின்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் தமிழ் மொழி வளர்ச்சியில் தமிழீழம் பாரிய முன்னேற்றத்தை காண்கின்றது. பல போரியல் கலைச்சொற்கள் எளிதாகவே எல்லோரதும் புழக்கத்தில் வந்துள்ளதை அவதானிக்கலாம்.
ஆனால் இவற்றிற்கு முற்பட்டக் காலக்கட்டங்களில் இருந்தே தமிழீழத்தில் ஜ, ஸ, ஷ, ஹ, போன்ற ஒலிக்குறிகளை உச்சரிப்பவர்களை காண்பது அரிது. இது படிப்பறிவு குறைந்தவர்களின் பயன்பாட்டிலும் அப்படித்தான். அட தமிழில் மட்டுமல்ல ஆங்கில மொழி உச்சரிப்புகளிலும் இந்த வடமொழி ஒலிப்புக்கள் பலருக்கு வருவதே இல்லை.
உதாரணமாக:
பஸ் – வசு
ஹவுஸ் புல் – கவுசு புல்
ரஜனிகாந்த் – ரயனிகாந்த்
கமலஹாஸன் – கமலதாசன்
இவ்வாறான வடமொழி ஒலிப்பு தவிர்ந்த பயன்பாடு தமிழீழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழரின் பேச்சு வழக்கில் எக்காலம் தொட்டு இருக்கின்றது என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் யாழ்ப்பாண இராச்சியம் இலங்கைக்கு போர்த்துகீசர் வரும் முன்பு வரை தமிழரைத் தவிர்ந்த வேறு எந்த ஒரு மொழியினரின் ஆளுகைக்கும் உற்படாததன் காரணத்தால், தமிழகத்தில் கிரந்த செல்வாக்கு மிகுந்தெழுந்து தமிழகத் தமிழை சீர்குழைத்தப் போதும், அதன் தாக்கம் தமிழீழத்தில் ஏற்படவில்லை அல்லது நிலைப்பெறவில்லை என்பதே கவனத்துக்கு உரியவை.
இதுப் போன்ற தமிழீழத் தமிழர்களின் ஒலிப்பு வழக்கே “கொங்கொங்” என்று பலர் கூற காரணமாக இருக்கின்றது.
என் இனிய தமிழ் உறவுகளே! எம் தமிழ் மொழி எந்த ஒரு பிற மொழி தாக்கமில்லா தனித்தன்மை வாய்ந்த தொன்மையான ஓர் மொழியாகும். நமது மொழி ஒரு செம்மொழியுமாகும். நாம் ஏன் பிற மொழிகளின் ஒலிக்குறிகளைப் பயன்படுத்த வேண்டும்? தமிழர்களாகிய நாம் தமிழ் பேசும் பொழுதாவது அந்நிய மொழிகளின் கலப்பையும் ஒலிப்பையும் தவிர்ப்பது நல்லதல்லவா?
ஹொங்கொங் – NO! NO!!
ஹாங்காங் – நஹி! நஹி!!
கொங்கொங் – ஆம்! அப்படியே கூறுவோம்.
அன்புடன் அருண்
ஆமாம் நான் கூட நீங்கள் சொன்னமாதிரித்தான் பேசுவேன்!!!!
எனது முதல் பதிவுக்கான முதல் பின்னூட்டம் அதுவும் உங்களிடமிருந்து.
ஊக்குவிப்பிற்கு மிக்க நன்றி.
சுங் கிங் மென்சன் ஒரு வகையிலே ஏழைகளின் ஐநா கட்டிடம்
பகிடியாக கூறுகிறீர்கள் -/.
வருகைக்கு நன்றி!
நீங்க வேற தமிழில் “F” உச்சரிப்பு இல்லை என்பதால், அதற்கு ஒரு எழுத்து சேர்க்கனும் என்று சொல்லுறாங்க.. !!
வாருங்கள் TBCD!
//தமிழில் “F” உச்சரிப்பு இல்லை என்பதால், அதற்கு ஒரு எழுத்து சேர்க்கனும் என்று சொல்லுறாங்க.. !!//
சிலர் அப்படியும் சொல்லலாம். தவிர தமது தாய் மொழி மட்டுமல்ல, தாம் வாழும் நாட்டின் அந்நிய மொழி கற்பிப்பு முறைகளும் அரசியல் ஆளுகைக்குள் உட்பட்ட வரைப்பட எல்லைக்கோடுகளும் ஒலிப்புக்களையும் உச்சரிப்பையும் மாற்றிவிடுகின்றன.
உதாரணம்: அமெரிக்க ஆங்கிலம் – பிரிட்டிசு ஆங்கிலம்
இந்தியரின் ஆங்கில ஒலிப்பு முறை
இலங்கையரின ஆங்கில ஒலிப்பு முறை
எனது கவலை எல்லாம் . . .
காலகாலமாக தமிழர் ஆளுகைக்குள்ளேயே இருந்த யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துகீசரிடம் வீழ்ந்தது. இருப்பினும் போர்த்துக்கீசரும் அதன்பின்
டச்சுக்காரரும் தமிழர் தேசத்தையும் சிங்களத் தேசத்தையும் வேவ்வேறாகவே ஆட்சி செய்தனர்.
அதன் பின் வந்த ஆங்கிலேயரே ஒற்றை நாடாக மாற்றினர். அங்கிலேயர் அகன்றப்பின்பு அது அதே ஒற்றை ஆட்சி அதிகாரம் சிங்களவர் கைக்கு மாறியது. அப்பொழுதும் அது சிங்களவரின் முழுமையான ஆளுகைக்கு வீழ்ந்து
விடவில்லை என்றே கூறவேண்டும். காரணம் தமிழர் பிரதேசங்களின் பாராளுமன்ற அமைச்சர்களாக தமிழர்களே ஆட்சியில் அமர்ந்திருந்தனர்.
அதனால் பௌத்த சிங்களம் தனது ஆதிக்கத்துக்குள் முழுமையாக தமிழீழத்தை வீழ்த்த முடியவில்லை. வீழ்த்தும் முயற்சிகள் தொடர்ந்தன. ஆனால் தமிழர் எழுச்சியும்,
ஆயுதம் தாங்கிய புரட்சியும் அதனை ஒரு வரையரைக்குள் இட்டிருந்தது.
இன்று இலங்கை அரசு மேற்கொள்ளும் தமிழருக்கு எதிரான இனவழிப்பு போரின் முடிவு இனிவரும் காலங்களில் என்னென்ன நடைப்பெறப்போகின்றதோ?
இதில் தமிழீழத்தவரின் தனித்துவமான தமிழ் ஒலிப்பு முறைகள் மட்டுமன்றி அனைத்து வளங்களும் அழிந்துவிடும் அபாய நிலையே தோன்றியுள்ளது.
பௌத்த சிங்களத்தின் நீண்டக்கால கனவும் அதுதான்.
சர்வதேச சமூகத்தின் ஆதரவும் உலகத் தமிழினத்தின் ஒருமித்த செயல் பாடுகளுமே தற்போதைய சூழ்நிலையில் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடியன.
நன்றி