Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

பாடசாலை ஆங்கில கல்வித் திட்டம் பற்றிய ஒரு ஆய்வினை கேள்வி பதிலாக ஆறாம்திணை இணையத் தளத்தில் காணக்கிடைத்தது. அதை வாசிப்பதில் எழுத்துரு (Font) சிக்கலாக இருப்பதால் அதில் சிலப் பகுதிகளை இங்கே இட்டுள்ளேன். இது ஆங்கில கல்வி தொடர்பான ஆக்கம் என்பதால் இது எனது கவனத்தைக் கவர்ந்தது.

தமிழகக் கல்வி வட்டாரத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் மற்றும் அதனை மேம்படுத்தும் முயற்சிகளுக்காக அறியப்பட்டவர் பேராசிரியர் சரசுவதி. ஐதரபாத் CIEFL நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். ஆங்கில மொழி ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர். பல அரசு பாடநூல்களின் ஆசிரியர். கல்வியிலும் புத்தகங்கள் இயற்றுவதிலும் ஆர்வமுடையவர். மொழிக் கல்வி பற்றிய தமது எண்ணங்களை நம்முடன் அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து . . .

என “சாய்ராம்” என்பவரின் கேள்விகளுக்கு பேராசிரியர் சரசுவதி அவர்கள் அளித்த பதில்கள்.

கேள்வி: கல்லூரியளவில் ஆங்கிலக் கல்வியின் தேவையும் பயன்பாட்டையும் வளர்ச்சியையும் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

12 ஆண்டுகள் பள்ளியில் ஆங்கிலம் கற்று, கல்லூரிக்கு வரும் பல மாணவர்களால் ஆங்கிலத்தில் சரியாகப் பேச முடியாததைத் தான் பார்க்கிறோம். என்ன காரணம்?

பாடத்திட்டங்கள் சரியில்லையா?

மாணவர்கள் ஆர்வம் இல்லையா?

ஆசிரியர்களுக்குத் திறமையில்லையா?

பதில்: மாணவர்களுக்கு ஆர்வமில்லையென்று சொல்ல முடியாது. காரணம் பல பேர் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுவதற்காக நிறையப் பணம் செலவழித்துத் தனியார் நிறுவனங்களில் ஆர்வத்துடன் சேர்கிறார்கள்.

ஆசிரியர்களைக் கேட்டால் “பாடங்களை சரியாகத் தான் கற்பிக்கிறோம்” என்பார்கள்.

நமது பாடத்திட்டத்தில் பல குறைகள் இருக்கின்றன.

பேச்சுத் திறனுக்கு பாடத்திட்டத்தில் இடமில்லை. வெளிநாட்டில் வேலைக்குச் சேரும் பல பொறியியல் வல்லுனர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதிலும் பலர் ஆங்கிலத்தைச் சரியாகப் பேச முடியாததனால் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

கேள்வி: நமது பாடத்திட்டங்கள் 50 ஆண்டுகள் பழமையானது. அதிலே சிற்சில மாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன. அப்பொழுது ஆங்கிலேயர் ஆட்சி புரிந்தக் காலம். அவர்களை திருப்திப் படுத்துவதற்காக ஆங்கில இலக்கியத்தைக் கற்று கொண்டிருந்தோம். ஆனால் நிலைமை இன்னும் மாறவில்லை. தமிழ் மாணவர்கள் ஆங்கில இலக்கியத்தைக் கற்றுக் கொள்ள முடியாமல் நிட்டூரு போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆசிரியர்களோ சேக்ஸ்பியரும், செல்லியும் முக்கியமானவர்கள் என்பார்கள். ஆனால் சாதாரன மாணவர்களுக்கு எதுவும் புரிவதில்லை. இதற்கு என்ன தான் தீர்வு?

பதில்: ஆங்கிலம் கற்பதைத் தேவை சார்ந்த கல்வியாக்க வேண்டும் என்பேன். எழுதும் திறமையை, பேசும் திறமையை வளர்ப்பதாய் ஆங்கில கல்வி அமைய வேண்டும் என்பேன்.

நமது தேர்வு முறையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். மாணவர்களின் நினைவுத்திறனைத் தான் நமது தேர்வுகள் சோதிக்கின்றன. அவர்களது அறிவிணை அல்ல.

மாணவர்கள் தேர்வு வழிக்காட்டிப் புத்தகங்களைப் படித்தாலே போதுமானது என்கின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இப் புத்தகங்களில் இருப்பவற்றை மனப்பாடம் செய்து நல்ல ஆங்கிலத்தில் எழுதி விட்டால் மதிப்பெண்கள் பெற்று விடலாம். ஆசிரியர்கள் கூட இலக்கியம் வாசிக்காமல் பாடங்களை கற்பிக்க முடியுமென்ற சூழ்நிலை தான்.

ஆங்கில மொழியறிவு தான் வேலையைப் பெற்றுத் தருகிறது.

நாம் மேற்குமயமான கல்வித்திட்டத்தில் இருக்கிறோம். நமது கலாச்சாரத்துடன், நமது வேர்களுடன் தொடர்பு கொண்ட கல்வித்திட்டம் வேண்டும்.

நமது கல்வி சமூகத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கே பெரும்பாலும் உதவுகிறது. அது எல்லோரையும் சென்றடைய வேண்டும். ஆங்கில மொழியறிவு இல்லாதவர்கள் சில மட்டங்களைச் சென்றடைய முடியாத நிலை தான் இன்றைக்கும் இருக்கிறது.

ஆங்கிலம் தான் இந்தியாவை மூன்றாம் உலக நிலையிலிருந்து முன்னேற்றும் கருவியாக உதவும்.

இவ்வாறு பேராசிரியர் சரசுவதி அவர்கள் கூறுயுள்ளார்.

நன்றி ஆறாம்திணை

எனது கருத்து

உலகமயமாக்கலில் தொடர்பாடல்கள் மிக வேகமாக அதிகரிக்கப்பட்டு நாடுகளுக்குள் பல்தேசிய நிறுவனங்களின் முதலீடுகள் பாரியளவில் பெருகிவரும் நிலையில், உலக மக்களை ஒருங்கிணைக்கும் ஊடகமாக ஆங்கிலமொழி வளர்ச்சி கண்டிருப்பதுடன், அதனைக் கற்க வேண்டிய அவசியம் அனைவருக்குமே ஏற்பட்டுள்ளது.

எம்மவர்களின் ஆங்கில கல்வி வளர்ச்சிக்கு பாடசாலை ஆங்கில பாடத் திட்டமுறைகளில் மாற்றம் அவசியம் என்றே எனக்கும் தோன்றுகின்றது. பல வருடங்கள் பாடசாலையில் ஆங்கிலம் கற்றாலும் எளிதில் புரியக்கூடியதாக பாடசாலை ஆங்கிலப் பாடத் திட்டம் இல்லை என்பதே பலரதும் கருத்தாகும்.

இவ்விதக் கல்வி திட்டமே பலருக்கு ஆங்கிலம் கசக்கும் பாடமாக இருப்பதாகவும் பார்க்கின்றோம். உண்மையில் ஆங்கிலம் மிக மிக இலகுவான ஒரு பாடம், அதை முறையாக விளங்கிக் கற்றோமானால்.

ஆங்கிலக் கல்வியில் மட்டுமன்றி சகல பாடங்களிலும் முறையான காலத்திற்கேற்ப மாற்றம் அவசியம் என்பதையே நானும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

“ஆங்கிலம்” பாடத்தில் மட்டுமன்றி சகலப் பாடங்களிலும் இன்று எத்தனையோ இலகுவான நவீன திட்டங்கள் உலகளவில் காணப்படுகின்றது. இவை எமது சமுதாயத்திற்கு கிடைப்பதாக எனக்குத் தெரியவில்லை. குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு எட்டாத கணியாகவே இவை இன்றும் இருப்பதாக எனக்குப் படுகின்றது.

இன்றையக் காலக் கட்டத்தில் எமது சமூக வளர்ச்சிக்கும் ஆங்கிலம் அவசியமானதாகவே எனக்குப் படுகின்றது.

இத்தாலி, நெதர்லாந்து, பிரான்சு, யப்பான் போன்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்தோரும், தொழில் வாய்ப்புக்காக சென்றோரும் பொதுவாக முன் வைக்கும் ஒரு காரணம் “அந்த நாடுகளிலெல்லாம் ஆங்கிலம் கற்று ஒன்றுமே செய்ய முடியாது” என்பதாகும். ஆம், அந்த நாட்டுச் சூழ்நிலை அந்த நாட்டவரின் மொழி மற்றும் பொருளாதார வளர்ச்சி காரணமாக அந்தந்த நாடுகளில் அந்நாட்டு மொழியிலேயே அனைத்து கண்டுப் பிடிப்புகளும், விளம்பரங்களும், அறிவியலும், தொழில் நுட்பத் தகவல்களும் கிடைக்கப் படுகின்றது. மேற் கூறிய கருத்து அந்நாட்டவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கலாம். அந்நிலைக்கு அந்தந்த நாட்டவரின் மொழிப்பற்றும் முக்கியக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் நமக்கு?

ஒரு வரையரைக்கு மேலே சென்றால் தமிழில் கற்பதற்கான கற்கை நெறிகளோ, பொத்தகங்களோ இல்லை என்பதே உண்மையாகும். எமது மொழியில் எந்த புதிய கண்டுப்பிடிப்புகளின் விளம்பரமோ, அறிவியல் தொழில் நுட்பமோ உடனே கிடைப்பதில்லை. காலம் கடந்து வரும் தகவல்களும் முழுமையானதாக இல்லை.

நாம் தமிழ் மீதுப் பற்றுக் கொண்டு அதன் முயற்சிக்கு உழைக்க விரும்பினாலும் முதலில் ஆங்கிலம் கற்றே ஆங்கிலத்தில் உள்ளதை தமிழுக்கு மொழிமாற்றும் பணியை செய்ய வேண்டியிருக்கும்.

இன்று பல இணையத்தளங்களில் காணப்படும் தகவல் நுட்பத் தகவல்களில் அதிகமானவை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றுபவைகளாகவே இருப்பது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்.

இன்று இணையத்தில் காணப்படும் என்னற்ற இணைய வசதிகளை நாம் தமிழில் பெற்றுக்கொள்கின்றோம் என்றால், அது ஆங்கிலம் கற்ற தமிழ் பற்றாளர்களாலேயே என்பது வெள்ளிடை மலை. ஒரு இணணயத்தளத்தின் வசதியை பயன்படுத்தும் நாம் அதுத் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் வந்தால் குறிப்பிட்ட தளத்தினரிடமிருந்து பதிலை எந்த மொழியில் பெற்றுக்கொள்வது? ஆங்கிலம் தெரியாவிட்டால் ஆங்கிலம் தெரிந்த தமிழ் வலைப்பதிவரையோ, நண்பரையோ அல்லவா நாடவேண்டியுள்ளது.

அதற்கு நாமாக ஆங்கிலம் படித்துக்கொண்டால் என்ன?

தமிழ் தமிழ் என்று பேசுவோரும், அதன் வளர்ச்சிக்காக தன்னார்வ தொண்டாற்றுபவர்களும் ஆங்கிலம் கற்றவர்களாகவே இருப்பதை அவதானியுங்கள். தாமும் ஆங்கிலம் கற்று, தம் பிள்ளைகளுக்கும் ஆங்கிலம் கற்பிப்பவர்களாகவே உள்ளார்கள் என்பது இன்னுமொரு எடுத்துக்காட்டு.

தமிழ் நமது தாய் மொழி அதனை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. ஆனால் அதைக் காப்பதற்கும் இன்றைய சூழலில் ஆங்கிலம் கற்க வேண்டிய கட்டாயத்திலேயே நாம் உள்ளோம் என்பதே எமது நிலமை.

தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கும் அதே நேரம், ஆங்கில கல்வியின் வளர்ச்சிக்கும் கல்வி மட்டத்தில் காலத்திற்கு ஏற்ற இலகுவான பாடத்திட்டங்கள் வகுக்கப் படவேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

இவ்வாக்கம் எமது ஆங்கிலம் வலைத்தளத்திலிருந்து மீள்பதிவிடப்பட்டுள்ளது.

அன்புடன் அருண் HK Arun

சிவா உயர்தர வகுப்பு பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் ஒரு மாணவன். பொறியியல் துறைக்கு தேர்வாகி விடுவேன் எனும் நம்பிக்கையில் பெறுபேறுகளுக்காக காத்திருந்தான். பெறுபேறு கிடைக்கும் வரை பொறியியல் துறையுடன் சம்பந்தப்பட்ட வேறு கற்கை நெறிகளை கற்பது நலம் பயக்கும் என்று எண்ணிய அவனது பெற்றோர் பல வகுப்புகளுக்கு அனுப்பினர்.

உண்மையில் சிவா படிப்பில் கெட்டிக்காரன். அவனது திறமையை பார்த்த பல மாணவ மாணவிகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கும் நேரம் கிடைக்கும் போது வீட்ட வந்து கற்றும் கொடுக்கும் படியும் கேட்பர். சிவாவும் தான் வகுப்புகளுக்கு போகும் நேரம் போக மிகுதி கிடைக்கும் நேரங்களில்
சில பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்தான்.

ஆம்! அவனது காலம் கற்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் ஓடிக்கொண்டிருந்தது. அப்பொழுது தான் அவனது வாழ்க்கை திசை திரும்பியது. அவன் செல்லும் வகுப்புக்கு சிவசாந்தி எனும் ஒரு மாணவியும் புதிதாய் வந்து இணைந்துக்கொண்டால். அவளும் படிப்பில் கெட்டிக்காரி. இருவரும் ஒரே துறைக்கு படிப்பவர்கள் என்பதாலோ என்னவோ இருவரும் காலப்போக்கில் காதலர்களாயினர்.

வகுப்பு தவிர்ந்த நேரங்களிலும் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டனர். ஒரே ஈருருளியில் இருவரும் சோடி போட்டுச் சென்றனர். வகுப்பில் சக மாணவர்களது உதவியுடன் அவர்களது காதல் வளர்ந்தது.

சிவசாந்தியின் ஊர் இணுவில். இடப்பெயர்வுக்கு கிளிநொச்சிக்கு வந்து அங்கே ஒரு காணி வேண்டி வசித்து வந்தனர். கிளிநொச்சியும் இராணுவ முற்றுகைக்கு உள்ளானப் பொழுது அங்கிருந்தும் இடம்பெயர்ந்து வன்னியில் அக்கராயன் எனும் பிரதேசத்தில் குடியேறினர். சிவாவின் ஊர் பருத்தித்துறை என்றாலும் நீண்டகாலமாகவே வன்னியில் வாழ்ந்ததால் வன்னியின் மைந்தனாகியிருந்தான்.

சிவாவின் தந்தை கிளிநொச்சியில் தனது தொழில் நிலைக் காரணமாக அங்கேயே இருந்துவிடுவார். என்றாவது ஒரு நாளைக்கு தான் வீட்டுப்பக்கம் வந்து போவார். வீட்டு நிர்வாகம் எல்லாம் சிவாவின் தாயாரே பார்த்து வந்தார். சிவா குடும்பத்தில் கடைசி மகன் என்பதால் அவன் செல்லப்பிள்ளையாகவே வளர்க்கப்பட்டான். இதனால் அவனுக்கு வீட்டில் அளவிற்கு அதிக சுதந்திரம் கிடைத்தது.

இந்த சுதந்திரமே பெரும் பிரச்சினைகளுக்கும் வழிவகுத்தது.

மீண்டும் புலிகள் கிளிநொச்சியை மீட்டனர். சனங்கள் மீண்டும் கிளிநொச்சிக்கு சென்று குடியேறினர். சிவசாந்தியின் குடும்பமும் சென்றது.

சிவா வகுப்புக்கு போகின்றேன் என்று கிளிநொச்சிக்கு செல்வதும். இருவரும் சந்தித்துக்கொள்வதும் இரு வீட்டாருக்கும் சந்தேகத்தை உண்டு பன்னி பிரச்சினையில் முடிந்தது. சிவாவின் பெற்றோர் சிவசாந்தியின் வீட்டிற்குச் சென்று பிரச்சினைப்பட்டனர்.

இப்பொழுதுதான் பூதம் வெளிக் கிளம்பியது. சிவசாந்தி கர்ப்பமுற்றிருந்தாள். அவரது பெற்றோர் கலங்கினர். சிவாவின் வீட்டில் வந்து நிகழ்ந்துள்ளதைக் கூறினர். பிரச்சினை மேலும் அதிகமானது. சாதி வெறி தலைத்தூக்கியது. சிவசாந்தியின் சாதியை சுட்டிக்காட்டி இழிவு படுத்தினர். சிவாவின் பெற்றோர் சிவாவை ஊரிலிருந்து வெளியேற்றினர்.

ஒருவர் இன்னொருவரது சாதியை சுட்டிக்காட்டி இழிவுபடுத்தியதாக யாரும் காவல் துறையில் புகார் கொடுத்தாலோ அல்லது காவல் துறையாகவே அறிந்துக்கொண்டாலோ அதற்கு தமிழீழச் சட்டப்படி ஏழு நாட்கள் சிறைத்தண்டனை. தப்பித்தவறி யாரேனும் சாதிப் பெயர் குறிப்பிட்டு அழைத்தால் அவருக்கும் 7 நாள் சிறைத்தான்.  திருமண வாழ்த்து மடல்களில் கூட சாதியை குறிப்பிட்டு அச்சிடுவதற்கு அனுமதியில்லை. சிவசாந்தியின் பெற்றோர் காவல் துறைச் சென்று முறையீடு செய்ய வெளிக்கிட்டனர். ஆனால் சிவசாந்தியோ தடுத்துவிட்டாள்.

அதுவரை சாதி பார்க்கக் கூடாது என்று சமத்துவம் பேசி வந்த சிவாவின் தந்தையும் சாதிவெறியுடன் பேசினார். தனது மகனை நியாயப்படுத்தினார்.

சிவசாந்தியின் பெற்றோர் கதிகலங்கினர். ஆனால் சிவசாந்தி மட்டும் நிதானத்துடன் கூறினார். நான் சிவாவை காணவேண்டும். “சிவாவுடன் உனக்கு என்ன பேச்சு” என்று சிவாவின் பெற்றோர் மறுத்தனர்.

சிவாவின் வீட்ட வந்து, சிவா வீட்டில் இல்லை என்பதை அறிந்துக்கொண்ட சிவசாந்தி “நான் காவல் துறையிடம் முறையிடப்போகின்றேன். சிவா எனக்குத் தந்த கடிதங்கள் எல்லாம் என்னிடம் சாட்சிகளாக இருக்கின்றன” என்றாள்.

சிவாவின் தந்தைக்கு ஓரளவு தமிழீழ சட்டங்கள் தெரியும். அது இலங்கை சட்டத்தைப் போன்று இலஞ்சம் கொடுத்து தப்பிக்கக் கூடிய சட்டங்கள் அல்ல. அவ்வாறு நிகழ்ந்தால் கொடுத்தவர், வாங்கியவர் இருவருமே தண்டிக்கப்படுவர். அவ்வாறான ஒரு செய்தியையே அங்கு யாரும் கேள்வி பட்டிருக்கவே மாட்டார்கள். குற்றவாளிக்கு கருணை மனு எனும் பேரில் தண்டனையை குறைக்க கோரி வக்கீல் வாதிடலாம். ஆனால் குற்றவாளியையே வக்கீல் நிரபராதியாக்க முனைந்தால். வாதிடும் வக்கிலுக்கும் சேர்த்தே தண்டனை வழங்கப்படும். காதலித்து ஏமாற்றப்படும் பெண்ணுக்கு ஏமாற்றியவனின் கைப்பட எழுதிய கடிதங்களே போதுமான ஆதாரம். தமிழீழ காவல் துறையே முன்னின்று திருமணத்தை முடித்து வைத்துவிடும்.

தமிழ் சினிமாவில் போன்று வெட்டருவாள் வீச்சுகத்தியெல்லாம் இங்கு சரிபடாது.

எனவே சிவாவின் தந்தை தயங்கினார். இருப்பினும் சிவாவை வேறு இடத்திற்கு அனுப்பிவைத்து விட்டதில் திருப்தியடைந்தார்.

நாட்கள் மாதங்களாகின. வயிற்றிலேயே குழந்தை வளரத்தொடங்கியது. அதனால் வெளியாட்களுக்கு முகம் கொடுக்க முடியாத இக்கட்டான நிலைக்கு சிவசாந்தியும் அவர் பெற்றோரும் தள்ளப்பட்டனர்.

காவல்துறையில் முறையிடுவது சிவாவிற்கு ஆபத்து ஏதும் வந்து விடும் என்று எண்ணியதால் சிவசாந்தியின் பெற்றோர் புகார் செய்ய முற்படும் போதெல்லாம் சிவசாந்தி தடுத்து நிறுத்திவிடுவார். கடைசியில் கர்ப்பம் வளர வளர சிவசாந்தியே வேறுவழியின்றி காவல் துறைக்கு சென்று முறையிட வேண்டியதாயிற்று.

காவல் துறை சிவாவின் பெற்றோரை விசாரனைகள் மேற்கொண்டு துருவித்துருவி விசாரிக்கத்தொடங்கியது. “ஐயா தயவு செய்து சொல்லுங்கோ எங்கே உங்கள் மகன்?” சிவாவின் தந்தையோ “சிவா எங்கே என்று தனக்கு தெரியாது” என்றே மறுதளித்தார்.

வன்னி நிலப்பரப்பிலிருந்து யாரும் வெளியேறுவதும் உள்நுழைவதும் மிக இலகுவானதல்ல. அதற்கான பதிவு விபரங்கள் கொடுத்தே யாரும் வெளியேறவோ, உள்நுழையவோ முடியும். சிவா அனுமதிப் பெற்று வெளியேறிய காலமும் நிறைவடைந்து மீண்டும் ஊர் திரும்பாததாலும், சிவாவை பற்றிய விசாரனைகள் அதிகரித்தன.

தமிழீழ காவல் துறை 7 நாட்கள் அவகாசத்தில் சிவாவை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதற்கும் சிவாவின் தந்தை அசைந்து கொடுக்கவில்லை. 7 நாள் அவகாசமும் முடிந்தது. சிவாவை கண்ட இடத்தில் கைது செய்யும் படி காவல் துறை அறிவித்து விட்டதாக கூறியது.

ம்ம்… ம்.. சிவாவின் தந்தை பிடிவாதமாகவே “தெரியாது” என்றார்.

சிவா வன்னிச் சூழலிலேயே வாழ்ந்து பழக்கபட்டவன். வீட்டாரின் பேச்சை மீற முடியாமலும் அவர்களை எதிர்த்து பேச தைரியம் இல்லாததாலும் வெவ்வேறு இடங்களிலும், உறவினர்களது வீட்டிலும் மாறி மாறி இருந்தான். கொழும்பு பிரதேசங்களிற்கும் அவனால் செல்ல முடியாது யுத்த வடுக்களே அவனை காட்டிக்கொடுத்து விடும். திருக்கோணமலையில் ஒரு உறவினரே இவனுக்கான ஏற்பாடுகளை செய்துக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

தொடர்ந்தும் சிவாவை காவல் துறையிடம் ஒப்படைக்க தவறிய குற்றத்தால் சிவாவின் தந்தை காலவரையரையின்றி சிவா திரும்பி வரும் வரை சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார்.

செய்தி அறிந்த சிவா செய்வதறியாது திகைத்தான். நாட்டை விட்டு வெளியேறவும் ஏற்பாடுகள் நிறைவுபெறும் தருவாயில் இருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென இரவில் அவன் இருந்த வீடு வந்த சில ஆயுததாரிகளால் அவன் மடக்கி பிடிக்கப்பட்டான். அடுத்த நாள் வன்னி காவல் துறையினரால் சிறையில் அடைக்கப்பட்டான்.

அவனுக்கு நாட்டைவிட்டு வெளியேற ஏற்பாடுகள் செய்துக்கொண்டிருந்தவரும்
வன்னிக்கு பிடித்து செல்லப்பட்டார்.

சிவாவை காவல் துறையினர் நையப்புடைத்தனர். சிவசாந்தி சிவாவை அடிக்க வேண்டாம் என்று அழுதாள். இருவரையும் திருமணம் முடித்து வைக்கும் படி இரண்டு குடும்பங்களுக்கும் காவல் துறை கட்டளை இட்டது. சிவாவை ஏற்பதோ மறுப்பதோ சிவசாந்தியை பொருத்தது. சிவசாந்தி சிவாவை மறுக்கும் பட்சத்தில் சிவசாந்தியின் வாழ்நாளுக்குமான சீவனாம்சமும் குழந்தை வளர்ப்பதற்கான முழு செலவையும் சிவாவே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கட்டளையிட்டது.

சிவசாந்தியின் மன்றாடலின் பின் சிவசாந்தியின் வயிற்றில் வளரும் குழந்தையின் காரணமாக சிவாவை விடுவிக்கப்பட்டது. சிவாவை மன்னித்து சிவசாந்தி இல்லற வாழ்வில் இணைந்தனர்.

சிவாவின் தந்தை பிழைக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக ஆறுமாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

சிவாவை தப்பிக்க உதவ முயற்சித்த குற்றத்திற்காக சிவாவிற்கு இருப்பிடம் வழங்கியவருக்கும் ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

ஒரு நாள் நள்ளிரவு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. யாரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது என்று எடுத்துப் பார்த்தேன் அது புதிய இலக்கமாக இருந்தது. அநேகமாக அறிமுகம் அற்றவர்களின் அழைப்புகளை, அதுவும் Private Number என்று வரும் அழைப்புகளிற்கு நான் பதிலளிக்க விரும்புவதில்லை.

ஆனால் அழைப்பு விடுத்தவரின் தொலைப்பேசி இலக்கம் தென்படவே பதிலளித்தேன். எதிர்முனையில் “கெலோ வணக்கம்” என்றதும் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் அது ஒரு தமிழ் குரல். ஆனால் அது இதுவரை எனக்கு பரிச்சியமில்லாத ஒரு புதிய குரல்.

நாடு விட்டு வந்திருக்கும் எமக்கு இங்கே எமது தமிழ் உறவுகளின் உறவுகளே மனதுக்கு புத்துணர்ச்சி தரும் விடயங்களாக இருக்கிறது.

பதினாறு மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற மகாகவி பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப் போல் இனிமையான ஒரு மொழியைக் யாம் காணோம்” என்றது நினைவிற்கு வந்தது. உண்மைதான், அதுவும் வேறு ஒரு நாட்டில் வசிக்கும் எமக்கு தமிழ் வார்த்தைகளை கேட்கும் போது மனதிற்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இனிமையாகத்தான் இருந்தது.

அந்த இனிமை, தொலைப்பேசி அழைப்பைத் துண்டிக்கும் முன்பே கசந்தும் விட்டது.

விசயம் இதுதான், எதிர்முனையில் பேசிய நபர், ஒரு அன்பர் எனது தொலைப்பேசி இலக்கத்தை கொடுத்ததாகவும், தமிழர் எனும் காரணத்தால் பேசுவதாகவும் தொடர்ந்தார். எப்படியோ தன்னை ஓர் மிகுந்த தமிழ் பற்றாளர் போல் இணங்காட்ட முயன்றார். தமிழ் பற்றியும், கொங்கொங் வாழ் தமிழர்களின் ஒற்றுமைப் பற்றியும் பேசினார். பேச்சு சூடு பிடித்தது.

அந்த நபர் கொங்கொங்கில் கிட்டத்தட்ட ஐந்து ஆறு வருடங்களாக இருப்பவர் என்பதால், கொங்கொங்கில் வசிக்கும் அநேகமான தமிழர்களுக்கு பரிச்சயமானவர். பல வருட கொங்கொங் வாழ்க்கையின் தனது அரும் பெறும் சாதனைகளாக நிறைய கூறினார். மனுசன் பாவம் பேசிக்கொண்டிருக்கும் போதே வடகிழக்கு பிராந்திய கட்டளை தளபதி ஆகிவிடுவார். என்னடாப்பா இந்த மனுசனுக்கு நானா கிடைத்தேன். சரி நபர் போதையில் இருப்பதானால் இவ்வாறு கூறுகிறார் என்று நினைத்துக்கொண்டேன். வயது நாற்பதுக்கும் ஐம்பதுக்கும் இடைபட்டவர் என்பதால் வயதுக்கும் மரியாதை கொடுத்து மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தேன்.

அவர் குரலில் தள்ளாட்டம் தெரிந்தது. அவரது பேச்சு போதையில் பேசுகிறார் என்பதை உணர்த்தியது. திடீரென ஆக்ரோசமாக பேசினார். நபர் போதையில் சண்டியர் ஆகிவிட்டார் போல் தெரிந்தது. தமிழர்களில் கெறி தமிழனும் இருக்கிறான்கள் என்றார்.

“கெறி தெமழன்” என்றால் யார் தெரியுமா? என்று கேட்டார்.

“கெறி தமிழன்” எனக்கு விசயம் விளங்கவில்லை. பேச்சு தடம் மாறியது. இருப்பினும் நபர் போதையில் இருப்பதால் இவ்வாறு பேசுகிறார் என நினைத்துக்கொண்டு ஒருவாறு தொலைப்பேசி இணைப்பை துண்டித்தேன்.

தமிழர்களை சிங்களவர்கள் “தெமழா” என்று அழைப்பதை கண்டுள்ளேன். தமிழர்களை இழிவாக பேசுவதற்கு உபயோகிக்கும் ஒரு வசைமொழியே இந்த “கெறி தெமழன்” என்ற சொல்லாகும். இந்த வார்த்தையை பலமுறை இராணுவ சோதனை சாவடிகளில் கேட்டுள்ளேன். இவ்வாரான ஒரு தரக்குறைவான வார்த்தையை தமிழரான இவரே ஏன் உபயோகிக்கிறார் என்று குழப்பமாகவும் இருந்தது.

இவ்வாறான மரியாதை அற்ற மனிதர்களின் உறவுகளை தவிர்த்துக்கொள்வது நன்று என நினைத்துக்கொண்டேன். அதன் பிறகு அந்நபரின் தொலைப்பேசி அழைப்பு பலமுறை வந்தது. ஆனால் நான் பேச விரும்பாது துண்டித்து விடுவேன்.

காலச்சக்கரம் சுழன்றது. கொங்கொங்கில் வசிப்பதோ கொஞ்சத் தமிழர்கள். மீண்டும் அவருடன் பேச வேண்டி ஏற்பட்டது. நல்லுறவும் ஏற்பட்டது. இப்பொழுது முன்பு போல் அல்லாமல் நல்ல மாதிரியாக பேசுவார்.

ஒரு நாள் அவரது வீட்டிற்கு ஒரு நிகழ்வுக்காக கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதால் போயிருந்தேன். அவரது குழந்தைகள் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். நான் அக் குழந்தைகளுடன் தமிழில் பேசினேன். அக் குழந்தைகள் பதிலளிக்கவில்லை. மீண்டும் மீண்டும் பேசினேன். ம்ம்… பதில் இல்லை.

நபர் பதிலளித்தார், பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்றார். ஆச்சரியமாக இருந்தது. அன்று தமிழ் பற்றாளர் போல் பேசினார் இன்று தன் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்கிறாரே.

மனதில் எழுந்த கேள்விகள், பிள்ளைகள் ஆங்கிலத்தில் கல்வி கற்றாலும், வீட்டில் தாய் தந்தையருடன் தமது தாய் மொழி தமிழில் தானே பேசியிருக்க வேண்டும். சரி பிள்ளைகள் சிறியவர்கள் பெரியவர்களான பெற்றோர் தம் பிள்ளைகளுடன் வீட்டில் என்ன மொழி பேசினார்கள்?

சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே எதிரே அவரது மகன் வந்தான். அவனது கையைப் பற்றி பெயர் என்ன என்றேன். “தமிழ் தெரியாது” என்று ஆங்கிலத்தில் பதிலளித்தான்.

சரி பிள்ளைகள் ஆங்கிலத்தில் கல்வி கற்பதாலும், தமிழ் மொழி உரையாடல்கள் இன்றி வளர்ந்து விட்டதாலும் இவர்களுக்கு தமிழ் புரியவில்லை என்று நினைத்துக்கொண்டேன். அதனால் நானும் ஆங்கிலத்திலேயே பேச முற்பட்டேன்.

What is your native language?

சிறுவன் பதிலளித்தான். “I am Sinhala”.

திகைப்புடன் திரும்பிப் பார்த்தேன். உடனே அந்த நபர் கூறினார் இவனின் தாய் சிங்களம். அருகே அவனது தாயார் நின்றுக்கொண்டிருந்தார்.

அதிர்ச்சியாக இருந்தது. சரி காதல் திருமணமாக இருக்கலாம். இருப்பினும் தகப்பன் தமிழ் எனும் போது, பிள்ளை தமிழன் என்று கூறாமல் சிங்களம் என்று கூறுகிறானே! வீட்டிலும் இலங்கையின் அரசியலா…?

என்னத்தான் ஒருவன் எப்படி வாழ்ந்தாலும் தமது தாய் மொழி மறந்து வாழ்வது வாழ்வா? அந்நிய தேசங்களில் ஆயிரமாயிரம் மொழிகளில் வல்லுநர்களானாலும், உலக தத்துவ ஞானியானாலும் தாய் மொழியான தமிழை மறந்து வாழ்வது வாழ்வா? அந்நிய தேசங்களில் தமிழை கற்றுக் கொடுக்க வாய்ப்பு இல்லாதிருந்தாலும் தன் குழந்தைகளுடன் தமிழில் பேசாதவன் தமிழனா? பேர் சொல்லும் பிள்ளை என்பார்கள். தன் பிள்ளையே தமிழன் இல்லை என்கிறது. தன் பிள்ளைக்கு நீ ஒரு தமிழனின் பிள்ளை “நீ ஒரு தமிழன்” என்றேனும் கூறி வளர்க்காதவனும் ஒரு தமிழனா..??

இல்லை! இல்லை!! இவர் ஒரு தமிழனே இல்லை!

குழப்பமாக இருந்தது.

ஆனால் குழப்பம் இல்லாமல் இந்நபர் ஒரு நாள் கேட்ட கேள்விக்கான பதில் இப்போது தெளிவாக விளங்கியது.

அது “கெறி தெமழன் என்றால் யார் என்று தெரியுமா?”

தெளிவுடன் வெளியேறினேன். காதில் தேனிசை தென்றல் செல்லப்பாவின் பாடல் வரிகள் ஒலித்துக்கொண்டிருந்தன.

தமிழா நீ பேசுவது தமிழா..

தற்போது நான் வாழும் தேசமான கொங்கொங் நாட்டின் எனக்கு பிடித்த ,என்னை பாதித்த, சிந்திக்க வைத்த  சம்பவங்களையும், இங்கே  வாழ் தமிழர்களின் நிலைப்பாடுகளையும் மையப்படுத்தியே எனது ஆக்கங்களை எழுதுவதாக உள்ளேன். 

இதன் குறை, நிறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு உங்கள் அனைவரிடமும் அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி

அன்புடன் அருண்

ஹொங்கொங் நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ள எமக்கு;  இங்கே சில தமிழக உறவுகளது உறவுகள் உண்டு. கிட்டத்தட்ட 2000 த்திற்கும் அதிகமான தமிழக தமிழர்கள் இந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக தமிழீழத்திலிருந்தோ, சிறிலங்காவிலிருந்தோ அல்லது வேறு ஒரு நாட்டிலிருந்தோ ஹொங்கொங் வரும் தமிழர்கள் குறிப்பாக “சிம் சா சுயி” (Tsim Sha Tsui) எனும் பகுதியில் அமைந்துள்ள “சுங் கிங் மென்சன்” எனும் கட்டிடத்திற்கே வருவார்கள். காரணம் ஹொங்கொங்கில் இங்கு மட்டுமே தமிழர்களுக்கு ஏற்ற உணவு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. மற்றும் தமிழர்கள் அதிகம் நடமாடும் கட்டிடமும் இந்த “சுங் கிங் மென்சன்” கட்டிடம் தான்.

சிறிலங்கா தமிழர்கள் இங்கே பல்வேறுப் பகுதிகளில் வசித்தாலும் அதிகளவில் வசிப்பது “யுங் லோங்” (Yuen Long) என்று அழைக்கப்படும் பகுதியில் ஆகும். இது சிம் சா சுயி என்ற இடத்திலிருந்து கிட்டத்தட்ட 30 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ளது.

இருப்பினும் எல்லோருக்கும் பரிச்சையமான இடமும், அதிகமான தமிழர்கள் நடமாடும் இடமும் இந்த “சுங் கிங் மென்சன்” கட்டிடம் தான்.

சரி விடயத்திற்கு வருவோம்.

இங்கே சில தமிழக உறவுகளுடன் கலந்துரையாடும் போது தமிழீழத் தமிழர்களாகிய நாங்கள் ஹொங்கொங் நாட்டின் பெயரை “கொங்கொங்” என்று உச்சரிப்பது தொடர்பாக சிறு விவாதம் எழுந்தது.அதற்கான விடை தரும் பொருட்டே இந்த ஆக்கத்தை எழுதுகிறேன்.

நாங்கள் “கொங்கொங்” என்று உச்சரித்தாலும், ஆங்கிலத்தில் Hong Kong என்று தான் எழுதப்பட்டுள்ளது. இதை இந்த நாட்டவரும், இந்த நாட்டில் வசிக்கும் பிரித்தானியர் மற்றும் ஐரோப்பியர் அமெரிக்கர் போன்றோரும் ஹொங்கொங் என்று தான் உச்சரிக்கின்றனர்.

இந்தியா, பாக்கிஸ்த்தான், நேபாள் நாட்டவர்கள் “ஹாங்காங்” என்று உச்சரிக்கின்றனர்.

ஆனால், தமிழீழத் தமிழர்களோ, தமிழ் உச்சரிப்புக்களிற்கு உட்படாத சொற்களை, அதாவது (வட இந்திய) ஜ, ஸ, ஹ, ஷ, போன்ற கிரந்த எழுத்துக்களின் ஒலிக்குறிகளை பயன்படுத்துவது மிகக் குறைவு. குறிப்பாக எமது நடைமுறை வாழ்க்கையில் கூட பிற மொழிகளின் கலப்பை விரும்புவதில்லை.

எழுத்தாக்கங்கள் போன்றவற்றிலும் தமிழ் ஒலிக் குறிகளுக்கு உற்படாத சொற்களை, வாக்கிய அமைப்புக்களை முடிந்தவரையில் தவிர்த்தே வருகின்றனர்.

இதற்கு காரணம் எம்மவர்களிடம் காணப்படும் அதிக அளவிலான தமிழ் பற்றே ஆகும்.

அந்நிய ஆதிக்க காலங்களின் போது தமிழர்கள் வாழ்ந்த எல்லாப் பிரதேசங்களையும் போன்று சில அந்நிய மொழிகளின் திணிபுகள் தமிழீழத்தில் தமிழுக்கும் ஏற்பட்டது. ஆயினும் அது மற்றைய தமிழர் வாழ் பிரதேசங்களைப் போன்று, பிற மொழிகளின் ஆதிக்கம் தமிழீழத்தில் தமிழை சீர்குலைக்கும் அளவிற்கு செல்லவில்லை. அல்லது எமது மூதாளர்கள் அவ்வாறு மொழிச் சீரழிவுக்கு செல்ல இடங்கொடாது காத்தனர் என்பதே பொருத்தமான கூற்றாகும்.  அக்காலம் தொட்டு இன்றுவரைப் பார்த்தால் தமிழ் பற்று இப்பிரதேசங்களில் மெம்மேலும் வழுவுற்றிருப்பதையே காணக்கூடியதாக இருக்கின்றது.  தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் தோன்றியிருக்கும் இனமுரண்பாடும் ஒரு காரணமாகப் பார்க்கலாம்.  1980 களின் பின்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் தமிழ் மொழி வளர்ச்சியில் தமிழீழம் பாரிய முன்னேற்றத்தை காண்கின்றது. பல போரியல் கலைச்சொற்கள் எளிதாகவே எல்லோரதும் புழக்கத்தில் வந்துள்ளதை அவதானிக்கலாம். 

ஆனால் இவற்றிற்கு முற்பட்டக் காலக்கட்டங்களில் இருந்தே தமிழீழத்தில் ஜ, ஸ, ஷ, ஹ, போன்ற ஒலிக்குறிகளை உச்சரிப்பவர்களை காண்பது அரிது.  இது படிப்பறிவு குறைந்தவர்களின் பயன்பாட்டிலும் அப்படித்தான்.  அட தமிழில் மட்டுமல்ல ஆங்கில மொழி உச்சரிப்புகளிலும் இந்த வடமொழி ஒலிப்புக்கள் பலருக்கு வருவதே இல்லை.

உதாரணமாக:

பஸ் – வசு

ஹவுஸ் புல் – கவுசு புல்

ரஜனிகாந்த் – ரயனிகாந்த்

கமலஹாஸன் – கமலதாசன்

இவ்வாறான வடமொழி ஒலிப்பு தவிர்ந்த பயன்பாடு தமிழீழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழரின் பேச்சு வழக்கில் எக்காலம் தொட்டு இருக்கின்றது என்பது சரியாகத் தெரியவில்லை.   ஆனால் யாழ்ப்பாண இராச்சியம் இலங்கைக்கு போர்த்துகீசர் வரும் முன்பு வரை தமிழரைத் தவிர்ந்த வேறு எந்த ஒரு மொழியினரின் ஆளுகைக்கும் உற்படாததன் காரணத்தால்,  தமிழகத்தில் கிரந்த செல்வாக்கு மிகுந்தெழுந்து தமிழகத் தமிழை சீர்குழைத்தப் போதும், அதன் தாக்கம் தமிழீழத்தில் ஏற்படவில்லை அல்லது நிலைப்பெறவில்லை என்பதே கவனத்துக்கு உரியவை.

இதுப் போன்ற தமிழீழத் தமிழர்களின் ஒலிப்பு வழக்கே “கொங்கொங்”  என்று பலர் கூற காரணமாக இருக்கின்றது. 

என் இனிய தமிழ் உறவுகளே! எம் தமிழ் மொழி எந்த ஒரு பிற மொழி தாக்கமில்லா தனித்தன்மை வாய்ந்த தொன்மையான ஓர் மொழியாகும். நமது மொழி ஒரு செம்மொழியுமாகும்.  நாம் ஏன் பிற மொழிகளின் ஒலிக்குறிகளைப் பயன்படுத்த வேண்டும்?  தமிழர்களாகிய நாம் தமிழ் பேசும் பொழுதாவது அந்நிய மொழிகளின் கலப்பையும் ஒலிப்பையும் தவிர்ப்பது நல்லதல்லவா?

ஹொங்கொங் – NO!  NO!!

ஹாங்காங் – நஹி! நஹி!!

கொங்கொங் –  ஆம்! அப்படியே கூறுவோம்.

அன்புடன் அருண்